தபால் அனுப்பியும் அரசு அலுவலர்கள் வராததால் ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு
தபால் அனுப்பியும் அரசு அலுவலர்கள் வராததால் ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.;
ஓமலூர்,
ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டம் தொடங்கியதும், தி.மு.க. கவுன்சிலர்கள் குப்புசாமி, திருஞானவேல், கோபால்சாமி ஆகியோர் ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள தபால் அனுப்பியும் வேளாண்துறை அதிகாரி மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இதில் தோட்டக்கலை துறை, வருவாய்த்துறை கல்வித்துறை சுகாதாரத்துறை அலுவலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் பதில் அளித்து பேசும் போது, 'முறையாக அனைவருக்கும் தபால் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு தபால் அனுப்பலாம்' என்றார். ஆனால் இதை ஏற்க மறுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் சிவஞான வேல் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காரசார விவாதத்துடன் கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.