இஸ்ரோ வரலாற்றில் 2026 மிகவும் முக்கியமான ஆண்டு - வி.நாராயணன் தகவல்
ககன்யான் உட்பட பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால் 2026 மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமான விண்வெளி சோதனைகளுடன் முன்னேறி வருகிறது. 2025-ம் ஆண்டில் பல முக்கிய திட்டங்களை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, 2026-ம் ஆண்டிலும் பல அற்புதங்களைச் சாதிக்கத் தயாராகி வருகிறது. எனவே இந்த ஆண்டு இஸ்ரோவிற்கு மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுறது.
2025 நிறைவடையும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். 2026-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயணங்களின் வெற்றி எதிர்கால மனித விண்வெளிப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். அதனால் தான் இந்த ஆண்டை இஸ்ரோ மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- புத்தாண்டில் இஸ்ரோவின் மற்றொரு முக்கிய மைல்கல் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. தொடர்ந்து, இஸ்ரோவின் வடிவமைப்பின் அடிப்படையில் எச்.ஏ.எல் மற்றும் எல்&டியால் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஓசோன்சாட்-3ஏ செயற்கைக்கோள் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்படுகிறது. நிலம் மற்றும் கடல் கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், வானிலை ஆய்வுகள் மற்றும் மீன்வளத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
வருகிற 2027-ம் ஆண்டு 3 விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்துக்காக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் ஏவி பரிசோதனை செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது.
இதற்கான முதல் ராக்கெட்டை புத்தாண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதில் வியோமித்ரா என்ற பெண் ரோபோவும் பயணிக்கிறது. இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பை முழுமையாக சோதிக்கும். இது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு முன் ஒரு சோதனைப் பணியாகும். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஒரு சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1எல்) என்ற வழி செலுத்தும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இவை முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.