இந்திய அளவில் முதலிடம்... நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டைகள் உற்பத்தி
தேசிய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.;
நாமக்கல்,
தமிழகத்தில் கோழி வளர்ப்பு என்பது கடந்த 1975-ம் ஆண்டு கால கட்டத்தில் விவசாயிகளின் உப தொழிலாக தொடங்கப்பட்டது. அப்போது ஒரு பண்ணைக்கு 100 முதல் 500 கோழிகள் வரை வளர்க்கப்பட்டு வந்தன. பின்னர் அது படிப்படியாக வளர்ந்து முட்டைக்கோழி வளர்ப்பு என்பது தற்போது பெரிய தொழிலாக வளர்ந்து உள்ளது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பண்ணையாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை கொண்ட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. ஒவ்வொரு பண்ணையிலும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே மிகக்குறைந்த பரப்பில் அதிக அளவில் கோழிகள் வளர்ப்பதில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் முட்டை நகரம் (எக் சிட்டி) என்று அழைக்கப்படும் நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைகள் உயர் தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதி வளர்ச்சி என நவீன மாற்றங்களை சந்தித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வெளியான அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளி விவரங்களின்படி இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு 19.98 சதவீதம் பங்களிப்பை அளித்து தேசிய அளவில் முதலிடத்தில் நீடிக்கிறது. இதை தொடர்ந்து ஆந்திரபிரதேசம் 12.91 சதவீதம் மற்றும் தெலுங்கானா 12.32 சதவீதம் பங்களிப்பில் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தமாக வளர்க்கப்படும் முட்டை கோழிகளின் எண்ணிக்கை சுமார் 8.79 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தினசரி சுமார் 7.47 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் தேசிய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
தமிழ்நாட்டில் தனிநபருக்கான முட்டை இருப்பு இந்த ஆண்டில் 317 முட்டைகளாக உயர்ந்து உள்ளது. இது தேசிய சராசரியான 106 முட்டைகளை விட மிக அதிகமாகும். கடந்த அக்டோபர் மாதம் வரை, இந்த ஆண்டில் நாமக்கல்லில் இருந்து சுமார் 139 கோடியே 62 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. முந்தைய ஆண்டின் 78 கோடியே 64 லட்சம் என்ற எண்ணிக்கையை விட இது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு தெரிவித்து உள்ளது.