பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னையில் தெருக்கள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் காலி நிலங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை அங்கீகாரமின்றி கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு, காற்று மாசுபாடு, வெள்ள அபாயம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தவாறு இருக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு கட்டிடக் கழிவுகளை அங்கீகாரமின்றி பொது இடங்களில் கொட்டும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-
கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை அங்கீகாரமின்றி கொட்டுவதை கண்டறியப்பட்ட உடனே குற்றத்தில் ஈடுபட்ட வாகனம் அமலாக்கத்துறையினரால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். தேவையான விவரங்கள் அதிகாரிகளின் செல்போன் செயலியில் பதிவேற்றப்படும். கொட்டப்பட்ட கட்டுமானக் கழிவுகளின் அளவை அடிப்படையாக கொண்டு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விடுவிக்கப்படும்.
இந்த நிலையான நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதுடன், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கட்டாயமாக அமல்படுத்தப்படும். அனைத்து கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், வாகன இயக்குனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ள மையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
இதனை மீறுவோருக்கு எந்த விதிவிலக்கும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.