தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Update: 2022-07-17 23:19 GMT

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 63 பேர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முகவர்களும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுமான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி மற்றும் தேர்தல் பிரிவு இணை பொறுப்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் திரவுபதி முர்முவுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது தொடர்பாக ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்கினர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆறுதல் கூறாதது ஏன்?

சின்னசேலம் பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசிலும் புகார் செய்துள்ளார். தான் மிரட்டப்பட்டு வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, அரசு சார்பிலோ இதுவரை மாணவியின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. தனது மகள் மர்மமான முறையில் இறந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. அந்த தாய்க்கு நீதி கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் கொதித்து போய் நீதி கிடைக்காத காரணத்தால் அந்த பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது

நீதி கேட்டு போராடும் அந்த குடும்பத்தின் குரலுக்கு அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. அப்படிப்பட்ட சூழல் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. செயலற்ற அரசு தமிழகத்தில் நடக்கிறது. உளவுத்துறை செயலற்ற நிலையில் கிடக்கிறது. இத்தனை சம்பவங்களுக்கும் முழு காரணம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும், காவல்துறையும் தான்.

அதேபோல கடலூரில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, அப்பள்ளியின் முன்னாள் மாணவரின் பிறந்தநாள் விழாவுக்கு அவர் அழைப்பின்பேரில் நட்பு ரீதியாக சென்றிருக்கிறார். அப்போது அந்த மாணவர் மாணவிக்கு கேக் ஊட்டியிருக்கிறார். இந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமையை நடத்தியுள்ளனர். இந்த ஆட்சியில் பெண்களுக்கு, மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

அரசியல் இருக்கிறதா?

கேள்வி:- மாணவி உயிரிழப்புக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியிருக்கிறாரே?

பதில்:- விசாரணை முடியாதபோதே எப்படி தீர்ப்பு கொடுக்க முடியும்? எப்படி பள்ளி நிர்வாகத்துக்கும், இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸ் டி.ஜி.பி. சொல்லமுடியும்? ஒருபக்கம் விசாரணை நடக்கிறது என்கிறார். இன்னொரு பக்கம் பள்ளிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார். இதிலேயே ஒரு முரண்பாடு தெரிகிறதே... நிச்சயம் இதில் சந்தேகம் எழுகிறது. காவல்துறை இந்த வழக்கில் முறையாக செயல்படவில்லை. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் எழுந்திருக்கும் சந்தேகங்களை போக்கக்கூடிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்