ஆசிரியையிடம் அநாகரிகமாக நடந்த தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கல்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியையிடம் அநாகரிகமாக நடந்த தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

Update: 2023-08-06 18:39 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4-ந்தேதி கல்பாக்கம் புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அப்பள்ளி தமிழ் ஆசிரியை, மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்றுவர வசதியாக விலையில்லா சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததாக பேசியுள்ளார்.

அப்போது மேடையில் இருந்த தி.மு.க. நிர்வாகி ஆவேசமாக எழுந்து, தமிழ் ஆசிரியையிடம் 'இத்திட்டத்தை கருணாநிதிதான் தொடங்கினார்' என்றும், 'நீ எப்படி ஜெயலலிதா தொடங்கியதாக பேசலாம்' என்று அநாகரிகமான வார்த்தைகளுடன் வாக்குவாதம் செய்து அவரை மிரட்டி உள்ளார்.

ஒரு பொது நிகழ்ச்சியில், முன் உதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்ச்சியில் ஆசிரியையிடம் தி.மு.க. நிர்வாகி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட நிகழ்வை கடுமையாக கண்டிக்கிறேன்.

தொடர்ந்து தி.மு.க.வினர் ஆசிரியர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவறிழைத்த தி.மு.க. நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்