திரவுபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆனைமலையில் திரவுபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.;
ஆனைமலை
ஆனைமலையில் திரவுபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திரவுபதி அம்மன் கோவில்
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சி, கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் குண்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து குண்டம் இறங்கும் மைதானத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழுங்க வாண வேடிக்கைகளுடன் குண்டம் பூ வளர்க்கப்பட்டது.
குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
இதையடுத்து நேற்று விரதம் இருந்த பக்தர்கள் உப்பாறு பகுதிக்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் செவ்வரளி மாலை அணிந்து அம்மனை வழிபட்டனர். அதன்பிறகு காலை 7.38 மணிக்கு குண்டம் மைதானத்திற்கு வந்தனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. உடனே பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 56 அடி நீளம், 11 அடி அகல குண்டத்தில் அம்மன் அருளாளி மல்லிகை பூவை உருட்டி விட்டார்.
பின்னர் 600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை 7.44 மணிக்கு குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். அதில் சிலர் அலகு குத்தியபடி குண்டம் இறங்கினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குண்டம் பூவை கையில் அள்ளி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று பட்டாபிஷேகம்
குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று(வியாழக்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்துதல், மாலை ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை மஞ்சள் நீராடுதல், இரவு போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது. மேலும் குண்டம் திருவிழாவையொட்டி நாளை மறுநாள் முதல் வருகிற 10-ந் தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.