நீரோடையில் குப்பைகள் கொட்டுவதால் மாசுபடும் குடிநீர்

பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்டுவதால் குடிநீரில் மாசு ஏற்படுவதால், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-05-23 13:49 GMT

வேலூர்

பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்டுவதால் குடிநீரில் மாசு ஏற்படுவதால், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிதி உதவி அளிக்க வேண்டும்

வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரித்திகா (வயது16). இவர் அளித்துள்ள மனுவில் நான் அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறேன். கிரீஸ் நாட்டில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 49 கிலோ எடைப்பிரிவில் 150 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் பெற்றேன். எனது தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. இதனால் போதிய வருமானம் இல்லாததால் என்னால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும். அதன் மூலம் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்த கமலா (வயது 62) என்பவர் அளித்துள்ள மனுவில், நான் பெற்று வந்த ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வரவில்லை. இதனால் நான் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளேன். ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குடிநீர் மாசு

பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம், ஏரிக்குத்தி, கொத்தபல்லி, தார்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் பல்லலகுப்பம் கிராமத்தில் நீரோடை அருகில் பேரணாம்பட்டு நகராட்சி குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசு அடைகிறது. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளோம்.

எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

லத்தேரியை அடுத்த எடகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒருவர் ரூ.15 ஆயிரத்தை அதிகாரியிடம் கொடுத்து கூட்டுறவு வங்கியில் உள்ள எனது நகையை மீட்டு தரவேண்டும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கூறுகையில், கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றேன். அதற்கான தொகையை செலுத்த சென்றால் நகை மூழ்கிவிட்டது என்கின்றனர். எனவே எனது நகையை மீட்டு தரவேண்டும் என்றார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்