தொடர் மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறிய காய்கறி மார்க்கெட்

தொடர் மழை காரணமாக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

Update: 2022-12-27 18:45 GMT

சின்னமனூர் நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் அங்குள்ள பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு முத்துலாபுரம் ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், எரசக்க நாயக்கனூர் அய்யம்பட்டி, புலிகுத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.

இங்கு ஒரு நாளைக்கு 10 டன் அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்கள் மற்றும் தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். மார்க்கெட்டில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வியாபாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையின் முன்பகுதியில் தேங்கி நின்று சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர், எனவே நகராட்சி நிர்வாகம் தினசரி மார்க்கெட்டில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு தனியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்