மூங்கில் கூடை உற்பத்தி முடங்கும் அபாயம்...

மூங்கில் கூடை விற்பனை குறைவால் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மாற்றுத்தொழில் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.;

Update:2023-10-18 18:26 IST

போடிப்பட்டி

மூங்கில் கூடை விற்பனை குறைவால் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மாற்றுத்தொழில் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

விஞ்ஞான வளர்ச்சியால் உருவான பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல் பல பாரம்பரிய தொழில்களையும் அழித்து வருகிறது.அப்படிப்பட்ட அழிந்து வரும் தொழில்களில் ஒன்றாக மூங்கில் கூடை உற்பத்தித் தொழில் மாறி வருகிறது.முன்பெல்லாம் வீடுகளில் தட்டுக்கூடை, காய்கறிக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, பூஜைக்கூடை, விசிறி, நாற்காலி, ஏணி என பல வடிவங்களில் மூங்கிலால் செய்த பொருட்கள் இடம் பிடித்திருக்கும்.இதுதவிர விவசாயப் பணிகளுக்கான அறுவடைக்கூடை, எருக்கூடை, கோழி, ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைக்கும் கூடை என பல விதங்களில் மூங்கில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் தற்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் பிடித்துக்கொண்டது.பல வண்ணங்களில் பல வடிவங்களில் கிடைப்பது மட்டுமல்லாமல் விலை குறைவாக இருப்பதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதற்கு காரணமாகும்.ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு நமது சந்ததியினர் கொடுக்கப் போகும் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை என்பது வேதனையான உண்மையாகும்.தற்போதைய நிலையில் மூங்கில் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் மாற்றுத் தொழில் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூங்கில் சாகுபடி

இதுகுறித்து மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பகுதியில் மூங்கில் கூடை முடையும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கூறியதாவது'முக்கிய மூலப்பொருளான மூங்கிலின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.கேரளாவிலிருந்து மூங்கில் கொண்டு வந்தால் மூங்கிலுக்கான செலவு மட்டுமல்லாமல் போக்குவரத்துக்காகவும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.தற்போது அமராவதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள விவசாயிகள் சிலர் மூங்கில் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் உள்ளூரிலேயே மூங்கில் வாங்கிக் கொள்ள முடிவது சற்று சாதகமான அம்சமேயாகும்.முன்பெல்லாம் அறுவடை சீசனில் அதிக எண்ணிக்கையில் கூடைகள் விற்பனையாகும்.அத்துடன் வீடுகள் மற்றும் விவசாயப் பணிகளில் அதிக அளவில் மூங்கில் பொருட்களின் பயன்பாடு இருந்ததால் எங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருந்தது.இதனால் பல குடும்பங்கள் மூங்கில் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.காலப்போக்கில் வேலை வாய்ப்பு குறைந்ததால் பல குடும்பங்கள் மாற்றுத் தொழில் தேடி சென்று விட்டனர்.எங்களைப் போன்ற ஒருசில குடும்பத்தினர் மட்டுமே இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

மழைக்காலம்

அப்போதெல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மூங்கில் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒருசேரக் கவனித்து வந்தோம்.எல்லோரும் தேடி வந்து பொருட்களை வாங்கிச்செல்வார்கள்.ஆனால் தற்போது விற்பனை குறைந்த நிலையில் வாகனங்களில் ஊர் ஊராக கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம்.இதனால் உற்பத்திக்கான நேரம் குறைந்து விடுவதாலும், விற்பனை குறைவாலும் மிக்ககுறைந்த வருமானமே கிடைக்கிறது.ரூ 100 முதல் ரூ 1000 வரை பல விலைகளில் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றாலும், கோழிகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை அடைக்கும் கூடைகள் உள்ளிட்ட ஒருசில பொருட்களே குறைந்த எண்ணிக்கையில் விற்பனை ஆகிறது.இதனால் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மூங்கில் பொருட்களுடன் சேர்த்து பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களையும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம்.மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மரக்கன்றுகளை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையிலான கூடைகள் விற்பனைக்கான ஆர்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்' என்று அவர்கள் கூறினர்.


--

Tags:    

மேலும் செய்திகள்