சங்கரநாராயணசாமி கோவிலில் துரை வைகோ தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் துரை வைகோ தரிசனம் செய்தார்;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணசாமி, கோமதி அம்மன் ஆகிய மூன்று சன்னதியில் தரிசனம் செய்தார்.
அப்போது ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் இசக்கியப்பன், நகர செயலாளர் ஆறுமுகசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும். சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். குறிஞ்சாங்குளம் கோவில் பிரச்சினை சம்பந்தமாக இரு தரப்பு மக்களும் அமைதியான சூழ்நிலையை தான் விரும்புகிறார்கள்.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கருத்தின் அடிப்படையில் தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதனை மீறி மத்திய அரசு ஆய்வு என்ற போர்வையில் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு துரை வைகோ கூறினார்