நிதி நிறுவன கிளையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் 12 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் ரூ.300 கோடி அளவில் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் தேனி கிளையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அறையின் பூட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

Update: 2022-12-16 19:00 GMT

நிதி நிறுவன மோசடி

சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறினர். அதை நம்பி முதலீடு செய்த மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் 23 இடங்களில் உள்ளன. இந்த கிளைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில், தமிழகத்தில் 23 கிளைகளில் நேற்று சோதனை நடந்தது. அதன்படி, தேனி தபால் நிலையம் செல்லும் சாலையில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்ட இடத்தில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி தலைமையில் போலீசார் நேற்று வந்தனர்.

பூட்டை உடைத்தனர்

அப்போது அந்த அலுவலகத்தை சில மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டு சென்று விட்டதாகவும், தற்போது அந்த கட்டிடம் வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் பொருட்கள் அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த அறையின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்த அறைக்கு 'சீல்' வைத்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.

ரூ.300 கோடி மோசடி

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் மூலம் தமிழகத்தில் 12 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் ரூ.300 கோடி அளவில் முதலீடு பெற்று மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 800 பேர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்த நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அதிக வட்டி தருவதாக கூறும் இதுபோன்ற நிதி நிறுவனங்களை நம்பி பணம் கொடுத்து மக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்