எடப்பாடி பழனிசாமியும் எங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது - டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பழனிசாமியும் எங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது

Update: 2022-10-02 20:04 GMT

நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். எடப்பாடி பழனிசாமியும் எங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

பேட்டி

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலைக்கு வாங்கும் நிலை

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அரசியலில் அதற்கு வாய்ப்புகள் இல்லை என சொல்ல முடியாது. முன்பும், இப்போதும் நடைபெறும் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்.ஐ.ஏ.) சோதனையில் நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சில தகவல்கள் வருகின்றன.

இந்த தகவல்கள் உறுதியானால் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பது என்பது எனது யூகம். அரசு டவுன் பஸ்களில் பெண்களின் இலவச பயணம் குறித்து அமைச்சர் ஒருவர் இழிவாக பேசியது தி.மு.க.வின் குணாதிசயத்தை காட்டுகிறது. சுயநலத்தால் சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

தனி இயக்கம்

அ.தி.மு.க. தவறான பாதையில் போவதால் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கும். இல்லையென்றால் வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க.வுடன், அ.ம.மு.க. இணையாது. அ.ம.மு.க. சுதந்திரமாக தனி இயக்கமாக செயல்படுகிறது. அதனால் இன்னொரு கட்சியுடன் சேருவது என்பதற்கான அவசியம் இல்லை.

தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம். அதற்கான தேவை ஏற்பட்டால் அதற்கு ஆதரவாக இருப்போம். நானும், சசிகலாவும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்வோம். ஓ. பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியும் எங்கள் பக்கம்

அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்பதில் அவருக்கும், எனக்கும் இருக்கும் கருத்து ஒன்றுதான். அதற்கான நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். எங்களுடன் எடப்பாடி பழனிசாமியும் வர வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமியின் புண்ணியத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து விட்டார்.

ஏதோ ஓடும் வரைக்கும் ஓடட்டும் என அவர் இருக்கிறார். ஓடும் வரைக்கும் ஓடி நிற்கும். எடப்பாடி பழனிசாமியின் புண்ணியத்தாலும், ஜெயலலிதாவின் மறைவாலும் இந்த ஆட்சி ஓசியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் (மு.க.ஸ்டாலின்) முதல்-அமைச்சராக இருப்பதால், அவருக்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பார்ப்போம்.

போதைப்பொருள் சாம்ராஜ்ஜியம்

தமிழகத்தில் போதைப் பொருள் சாம்ராஜ்ஜியம் உருவாகியிருப்பது என்பது உண்மைதான். போதைப்பொருளை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், போலீஸ்துறைக்கும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும்.

ஆனால், திராவிடர்களுக்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்தது தவறு என்று அப்போதே நான் சசிகலாவிடம் சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அந்த இரு தலைவர்களின் உருவப்படங்களுக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்