தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் குழு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

“விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் குழு நியமிக்கவேண்டும்”, என தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-10-03 22:03 GMT

சென்னை,

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளன. இதுபோலவே தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர் காப்பீட்டு தொகை

எனவே இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நிரந்தர மற்றும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாக திறந்திட வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி, தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு இல்லாததால் விவசாயிகள் நீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தங்களது பயிர்களுக்கு இழப்பீடு பெறமுடியாத நிலை உள்ளது. கடந்த சம்பா சாகுபடியின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படவும் இல்லை. அதேவேளை அ.தி.மு.க. ஆட்சியில் பயிர் காப்பீட்டு தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டதையும் விவசாயிகள் நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள்.

அதிகாரிகள் குழு

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு பயிரிட்டு அறுவடை செய்த குறுவை நெல்லை சாலைகளில் போட்டு பாதுகாக்கக்கூடிய அவலநிலை உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க. அரசில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்ததையும், தற்போது தி.மு.க. அரசில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதையும் விவசாயிகள் வேதனையுடன் நினைவுகூறுகிறார்கள்.

எனவே இந்த அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் டெல்டா மாவட்டங்கள் உள்ள தமிழகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை கணக்கெடுக்க உடனடியாக அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். நிரந்தர மற்றும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாக திறந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவேண்டும். குறுவை சாகுபடியையும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்