ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி கிடக்கும் நடமாடும் ஆலோசனை மைய வாகனம்- செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு உள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.;
ஈரோடு
ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு உள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
நடமாடும் மையங்கள்
தமிழ்நாட்டில் தற்போது மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அச்சப்படுத்தும் வகையில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகள் ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடமாடும் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டது.
வாகனங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து இந்த நடமாடும் ஆலோசனை மையம் செயல்பட்டு வந்தது. தற்கொலை தடுப்பு ஆலோசனைகள் மட்டுமின்றி, மாணவ-மாணவிகளின் குடும்ப நலன் சார்ந்த ஆலோசனைகள், மாணவிகளுக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் ரீதியான பிரச்சினைகளை கையாளும் முறைகள் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் வகையில் ஆற்றுப்படுத்துதலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் ஒரு வாகனம் மூலம் சென்று வந்தனர். இதற்காக தனியாக பள்ளிக்கல்வித்துறை மூலம் வாகனங்களும் ஒதுக்கப்பட்டன.
மாதத்துக்கு ஒரு முறை இந்த நடமாடும் ஆலோசனை மையம் அரசு பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தது. ஆனால் இந்த மையத்தின் செயல்பாடுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அதற்கான வாகனங்களும் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
கொரோனா
கொரோனாவுக்கு முன்பே நடமாடும் ஆலோசனை மைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் இயங்காததால் ஆலோசனை மையம் குறித்த எந்த செயல்பாடும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறக்கப்பட்டு முறையாக செயல்பட தொடங்கி விட்டன. காலை வழிபாடுகள் நடத்துவதில் இருந்து பள்ளிக்கூடத்தின் அனைத்து செயல்பாட்டு முறைகள் குறித்து உயர் அதிகாரிகள் பள்ளிக்கூடங்களுக்கு அறிவிப்புகள் அனுப்பி உள்ளனர்.
ஆனால், நடமாடும் ஆலோசனை மையம் தொடர்பான செயல்பாட்டு முறைகள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடமாடும் ஆலோசனை மைய வாகனங்கள் இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்ததால் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.
கேட்பாரின்றி...
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இந்த வாகனம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேட்பாரின்றி கிடக்கும் இந்த வாகனம் செயல்பாட்டுக்கு வருமா? என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இந்த வாகனத்தை அவ்வப்போது இயக்குவதால், வாகனம் 'ஸ்டார்ட்' ஆவதாகவும், சாலையில் ஓட்டும் நிலையில் உள்ளதா என்பது தெரியவில்லை என்றும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
நடவடிக்கை
தற்போதைய நிலையில் மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக தயார் படுத்த மனநல ஆலோசனை மிகவும் அவசியம். மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நடமாடும் ஆலோசனை மையங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.