விபசாரம், வட்டிக்கு பணம்... ஓசூர் அதிமுக பிரமுகர் கொலையில் கைதான கள்ளக்காதலி பற்றி பரபரப்பு தகவல்கள்...!

ஓசூர் அதிமுக பிரமுகர் கடந்த 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update:2025-12-08 21:51 IST

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாரசந்திரத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் (வயது 32). டிரைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலுடன், வட்டிக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலும் செய்து வந்தார். கடந்த 3-ந் தேதி காலை இவர் வானவில் நகர் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மஞ்சுளா (35) மற்றும் கூலிப்படையை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை போல மஞ்சுளாவிடம் கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான மஞ்சுளா விபசார தொழில் செய்து வந்தார். இளம்பெண்கள் பலரையும் வைத்து தொழில் செய்த அவரிடம் ஹரீஷ் பழகி வந்தார். அப்போது தான் ஹரீசுக்கும், மஞ்சுளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கணவரை பிரிந்த அவருக்கு ஒரு ஆண் துணை தேவைப்பட்டதால் ஹரீசை தனக்கு பாதுகாவலராக மஞ்சுளா வைத்து கொண்டார்.

விபசார தொழில் அல்லாமல் வட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் மஞ்சுளா செய்தார். அதாவது ரூ.100-க்கு ரூ.2 வட்டிக்கு வாங்கி, ரூ.3 வட்டிக்கு கொடுத்து வந்தார். இதன் மூலமும் அவருக்கு பணம் கிடைத்து வந்தது. மஞ்சுளா கையில் பணம் சரளமாக புழங்குவதை ஹரீஷ் பார்த்தார். எனக்கு நிறைய கடன் உள்ளது. நீ பணம் தந்தால் கடனை அடைத்து நிம்மதியாக நான் உன்னுடனே வாழ்வேன் என்று அவர் கூறினார்.

இவ்வாறு ஹரீஷ் ரூ.80 லட்சம் வரையில் மஞ்சுளாவிடம் பறித்தார். இதனிடையே வாடிக்கையாளராக வந்த மோனீஷ், மஞ்சுளாவிடம் பேசி வந்தார். இதை கண்டித்த ஹரீஷ், மோனிசை எச்சரித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபசார வழக்கில் மஞ்சுளா கைதாகி ஜாமீனில் வந்தார். இதன்பிறகு ஹரீசுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் தன்னை ஹரீஷ் கொடுமை செய்ததாக மஞ்சுளா போலீசில் புகார் செய்தார்.

பின்னர் மீண்டும் ஹரீசுடன் சமரசம் ஏற்பட்டு மஞ்சுளா வாழ்ந்து வந்தார். இதன் பிறகு ஹரீஷ் பணம் கேட்டு தொல்லை கொடுக்கவே மோனிசிடம் பேசி கூலிப்படையை தயார் செய்தார். ரூ.10 லட்சம் பேரம் பேசி, ரூ.4½ லட்சம் முதலில் அட்வான்சாக மஞ்சுளா கொடுத்தார். ஹரீசை கொன்று அவரது புகைப்படத்தை மோனீஷ், மஞ்சுளாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஹரீஷ் கொலை செய்யப்பட்டதை அவர் உறுதி செய்தார்.

இந்நிலையில் மறுநாள் மீதி தொகையை பெற்று கொள்வதாக கூறிய நேரத்தில் தான் மஞ்சுளா போலீசில் பிடிபட்டார். முக்கிய பிரமுகர்கள் பலரையும் தனக்கு தெரியும் என்று கூறி மஞ்சுளா பேசி வந்தார். பலரது செல்போன் எண்ணையும் வைத்துக்கொண்டு அவர்கள் எனது வாடிக்கையாளர்கள் தான் என்று கூறி வந்துள்ளார். பல இடங்களில் அவர்கள் பெயரை கூறி மஞ்சுளா தப்பித்தும் வந்துள்ளார்.

ஹரீஷ் கொலை வழக்கில் மஞ்சுளா, கூலிப்படையை சேர்ந்த 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் முதல் எதிரியாக மஞ்சுளாவையும், 2-வது எதிரியாக மோனீசையும் போலீசார் சேர்த்துள்ளனர். 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள சென்னத்தூர் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அவர் தான் கூலிப்படையை தயார் செய்தது, ஹரீசை கண்காணித்து கூலிப்படைக்கு தகவல் சொன்னது போன்ற வேலைகளை செய்துள்ளார். மேற்கண்ட பரபரப்பு தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்