சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

Update: 2023-09-19 18:49 GMT

டாம்கோ சார்பில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்விக்கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. மற்றொரு கல்விக்கடன் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்து, சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உண்மை சான்றிதழ் உள்ளிட்ட நகல்களுடன், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்