வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம்
பள்ளிபாளையத்தில் வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.;
பள்ளிபாளையம்
மின்கம்பம் உடைந்தது
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்து தனியார் காகித ஆலை சாலை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்தநிலையில் குட்டைமுக்கு என்ற பகுதி அருகே, நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சென்றது. அப்போது அந்த வாகனம் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக பலத்த சத்தத்துடன் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் வாகனம் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
மின்சாரம் துண்டிப்பு
இதனை அடுத்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் உடைந்த மின்கம்பத்தை அகற்றி சாலையை சீரமைத்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் இந்த விபத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.