மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-08 22:01 IST

பொள்ளாச்சி

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் 395 பேரில் 374 பேர் கலந்துகொண்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதும் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. செயலாளர் கோவிந்தராஜ், ஐக்கிய சங்க செயலாளர் சுப்பிரமணியம், தொ.மு.ச. செயலாளர் பிரபுகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சலுகைகள் பறிபோகும்

இதேபோன்று அங்கலகுறிச்சியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய அலுவலக வளாகத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மின்சார பழுதுகளை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-

மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள், மாநில உரிமைகள் முழுமையாக பறிபோகும். மின்சார கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோன்று நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற அனைத்து சலுகைகளும் பறிபோகும் என்பதால் எதிர்க்கிறோம். இதற்கு அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்