பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து சென்ற யானைகள்சுற்றுலா பயணிகள் அச்சம்

Update: 2023-02-11 19:00 GMT

பென்னாகரம்:

பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து சென்ற காட்டு யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

யானைகள் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியானது தமிழ்நாடு- கர்நாடக மாநில வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய வனச்சரகமாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் இருந்து கோடைக்காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஓசூர் சானமாவு பகுதிக்கு வருகின்றன. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் அதனை விரட்டு விடுகின்றனர். இதனால் யானைகள் கூட்டம் அவ்வப்போது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வருகின்றன.

சுற்றுலா பயணிகள் அச்சம்

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் உணவுக்காக வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை முறித்து சாப்பிட்டன. தண்ணீருக்காக காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்கின்றன.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒகேனக்கல் வனத்துறையினர் மடம் வனத்துறை சுங்கச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நுழையும்போது யானைகள் குறித்தும், வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தகூடாது, செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரோந்து பணி

மேலும் காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்