3 மாதங்கள் அவகாசம் கொடுத்தும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்

3 மாதங்கள் அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-01-23 19:15 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் வடுகர்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், வடிவேல் பாளையத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் 8 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஆதிதிராவிட நலத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தோம். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காவல்துறையினர் முன்னின்று 7 பேரின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஒரு நபர் மட்டும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டதை அடுத்து அவருக்கு அதிகாரிகள் கால அவகாசம் தந்தனர். ஆனால் அவர் 3 மாதங்கள் முடிந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளார். இதனை பார்த்து மற்றவர்களும் ஆக்கிரமிப்பு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்