மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, முதல் நாளில் புத்துணர்ச்சி வகுப்பு நடந்தது.;

Update:2022-06-13 21:33 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, முதல் நாளில் புத்துணர்ச்சி வகுப்பு நடந்தது.

பள்ளிகள் திறப்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். பெற்றோர் செல்லும்போது ஒரு சில குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. பள்ளிக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பாதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளிமுத்து மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்டங்கள்

பொள்ளாச்சியை அடுத்த நரசிங்காபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. இதில் நாதஸ்வர இசை, மேளம் முழங்க மாணவ-மாணவிகள் பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். மேலும் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வால்பாறை பகுதியில் உள்ள 85 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி பாடப்புத்தகங்களை வழங்கினார்.

புத்துணர்ச்சி வகுப்புகள்

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளிகள் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் முதல் ஒரு வாரத்திற்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்ச்சி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நடனம், கதை, பாட்டு போன்றவை மாணவ-மாணவிகளுக்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. மேலும் கடந்த கல்வி ஆண்டை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்