மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பொது நுழைவுத்தேர்வு
2023-24-ம் கல்வி ஆண்டில் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் வருகிற 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
2023-24-ம் கல்வி ஆண்டில் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் வருகிற 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
திருவாரூர் நீலக்குடி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை மூலம் கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வானது தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் அல்லாமல் பொதுநுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்றும் பல்கலைக்கழகம் மானியக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது.
மே மாதம் தேர்வு
அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் 34 ஆயிரத்து 555 பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைன் பொதுநுழைவுத் தேர்வுகள் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. அந்த வகையில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறை தொடங்கி உள்ளது.
இந்த பொது நுழைவுத்தேர்வுக்கு அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://curt.samarth.ac.in என இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதில் கல்வி சான்றிதழ், இருப்பிடச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட பொது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசி நாள்
பொதுநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். நடப்பு ஆண்டில் தேர்வு எழுத காத்திருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டு கட்டங்களாக இந்த பொதுநுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் 2-ம் வாரத்தில் தேர்வில் பங்கு பெற விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அதற்கான அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
மாணவ, மாணவிகள் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்கு நேரில் வந்து விவரம் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.