என்.எல்.சி.யில் சுற்றுச்சூழல் தின விழா

நெய்வேலி என்.எல்.சி.யில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பங்கேற்றார்.

Update: 2023-06-07 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நெய்வேலியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, நிறுவன கல்வி மற்றும் விளையாட்டுதுறை சார்பில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பசுமைப் பயணம் என்கிற களப்பார்வையிடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தை நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெய்வேலி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம்

இதில் நெய்வேலி அருகே உள்ள தெற்கு சேப்ளாநத்தம் கிராமத்தில் நெல், கரும்பு, நிலக்கடலை ஆகிய வயல்வெளிகளையும், முந்திரி, தென்னை மர தோப்புக்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் தெற்கு சேப்ளாநத்தம், காமராஜ் நகரில் உள்ள கொளஞ்சியப்பர் நவீன அரிசி ஆலைக்கு சென்று அதன் செயல்பாடு முறைகளை கேட்டறிந்தனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மாணவர்கள் அறிந்து கொள்ள செய்தனர்.

பின்னர் மாலையில், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நிலைய பேராசிரியர் துரைசாமியின் சுற்றுச்சூழல் குறித்த சொற்பொழிவு நடந்தது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் என்.எல்.சி. உயர் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், பொறியாளர்கள், அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெகிழி பயன்பாடு

மேலும், என்.எல்.சி. சார்பில் ஹெல்பேஜ் இந்தியா அமைப்பின் கீழ்செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் முதியோர்கள் இருக்கும் ஆனந்தம் இல்லத்துக்கு என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி வருகைதந்து,அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி பழங்கள்,இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல், நிறுவன சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வு காண வலியுறுத்தி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் சரவணன் தலைமையில் நெகிழி பயன்பாட்டை குறைக்க நிலையான வளங்கள் மற்றும் பொருள் ஒருங்கிணைப்பு என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. இந்தியா நிறுவன சுற்றுசூழல் துறையின் செயல் இயக்குனர் ராணி அல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்