சோலையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
வால்பாறையில் கனமழை பெய்வதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது;
வால்பாறை
வால்பாறையில் கனமழை பெய்வதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
சோலையாறு அணை
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழை காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை தாண்டி 163 அடியை எட்டியது.
இதனால் கடந்த 11 -ந் தேதி இரவு 9.15 மணிக்கு சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மீண்டும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியது. இதனால் இரவு 8.15 மணிக்கு மீண்டும் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 4526 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விட்டு விட்டு கனமழை பெய்வதால் சோலையாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஆறுகளில் தண்ணீர்
மழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.