சேலத்தில் பொருட்காட்சிஅமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் தொடங்கி வைத்தனர்
சேலம்
சேலத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அரசு பொருட்காட்சி
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
அரசு திட்டங்களை விளக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தற்போது பத்திர பதிவுத்துறையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.. அதன்படி ஒவ்வொரு துறையின் புதிய திட்டங்களையும் அறிந்து கொள்வதற்காகத்தான் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொருட்காட்சியை பார்வையிட்டு அரசின் புதிய திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயனடைய வேண்டும்
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-
தற்போது தொடங்கப்பட்டு உள்ள பொருட்காட்சி அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டில் மக்கள் நலத்திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 திட்டம் மற்றும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அரசு பொருட்காட்சியை 1 லட்சத்து 58 ஆயிரத்து 480 பேர் பார்வையிட்டு உள்ளனர். எனவே இந்த பொருட்காட்சி மூலம் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, வருவாய் அலுவலர் மேனகா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர் தமிழ்செல்வராஜன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சூரமங்கலம் மண்டலக்குழு தலைவர் கலையமுதன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் கோகுல் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.