கத்தி முனையில் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு

கடலூரில் கத்தி முனையில் ஊழியரிடம் செல்போன், பணத்தை ஒரு கும்பல் பறித்தது. மற்றொருவரை தாக்கியபோது அவர் கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பி ஓடியது.

Update: 2023-01-22 18:45 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கதிரவன் (வயது 38). கடலூர் ஊரக வளர்ச்சித்துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கடலூர் அண்ணா பாலம் வழியாக பாரதி சாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 5 பேர் கொண்ட கும்பல், கதிரவனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டது. செல்போனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கதிரவனை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது.

இது பற்றி கதிரவன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, வழிப்பறி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு தனியார் நிறுவன ஊழியரிடம் கொள்ளையர்கள் செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். இது பற்றிய விவரம் வருமாறு-

கத்தியை காட்டி மிரட்டல்

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் பாலமுருகன் (48). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இரவு பணி பார்த்து விட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் சென்ற போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கொள்ளையர்கள், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் அவரையும் கடுமையாக தாக்கி, செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் அவர், தனது செல்போனை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு, அங்கிருந்த ஒருவர் ஓடி வந்தார். இதை பார்த்த அந்த கும்பல், மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இது பற்றி பாலமுருகன், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.

கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கதிரவனிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணத்தை பறித்ததும், பாலமுருகனிடம் செல்போனை பறிக்க முயன்றதும் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வழிப்பறி கும்பலின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்து விடுவதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்