தொழிற்சாலை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் நிறுவனம் மற்றும் தொழிற்சாலை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்த போது தொழிலாளர் நலத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-10 00:45 GMT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன்படி கடந்த ஒரு மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2011-ன் கீழ் நீலகிரியில் 44 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு பரிசீலனை சான்று கட்டி வைக்காத 1 நிறுவனத்திற்கு ரூ.500, மேலும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 1 நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம், பொட்டலப் பொருட்களில் உரிய அறிவிப்புகள் இல்லாத 3 நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ன் கீழ் 10 நிறுவனங்களில் ஆய்வு செய்து குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

குழந்தை தொழிலாளர் சட்டம், 1986-ன் கீழ் மின்னனு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மற்றும் மாவட்ட குழந்தை தடுப்பு படையினருடன் கூட்டாய்வு மேற்கொண்டதில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே போன்று சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது முறைகேடுகள் மற்றும் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறுகையில், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் கண்டறியப்பட்டால், நிறுவன உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்ட ரீதியான நடவடிக்கையில் தண்டனையாக குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதமாக ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையிலும் விதிக்கப்படலாம் அல்லது சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்