திட்டக்குடி அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய விவகாரம்: வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி

திட்டக்குடி அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய விவகாரத்தில் மருந்தகம் என்று கூறி வீட்டிலேயே மருத்துவமனையை போலி டாக்டர் நடத்தி வந்து இருப்பது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2022-12-20 18:45 GMT


ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி கஸ்தூரி (32). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. தற்போது 3-வதாக கர்ப்பமானார். இந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக முடிவு செய்து, ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் குரங்காத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(45) என்பவர் நடத்தி வரும் மருந்தகத்தில்(மெடிக்கல்) கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கஸ்தூரி, தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சுரேஷ் ஏற்கனவே போலி டாக்டர் என்று கூறி கைது செய்யப்பட்டவர் ஆவார். இதையடுத்து, ஜாமீனில் வந்த அவர், கஸ்தூரிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததற்காக ராமநத்தம் போலீசாரால் நேற்று முன்தினம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையாக இயங்கியது

இந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருந்துகள் ஆய்வாளர் நாராயணன், திட்டக்குடி அரசு தலைமை மருத்துவர் சோமானந்தம் ஆகியோரை கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு செய்தனர்.

மருந்தகத்தின் உள்ளே சென்று, பார்த்த போது பின்பகுதியில் உள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் 2 படுக்கைகள் கிடந்தன. மேலும் ஒரு கட்டில், மேஜை, மருத்துவம் சார்ந்த பரிசோதனைகளுக்கான உபகரணங்கள், மாத்திரைகள் உள்ளிட்டவையும் இருந்தது.

அதாவது வெளித்தோற்றத்தில் ஒரு மருந்தகம் போன்றும், உள்ளே ஒரு மினி மருத்துவமனையையே அவர் நடத்தி வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து அதிகாாிகள், மருத்துவமனையை பூட்டி, சீல் வைத்தனர்.

18 ஆண்டுகளுக்கு மேலாக...

சுரேஷ், கடந்த 18 ஆண்டுகளாக இங்கு மருத்துவம் பார்த்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 17-ந்தேதி அதிகாரிகள், போலி டாக்டர் என்று கூறி சுரேசை கைது செய்த போது, உரிய முறையில் இங்கு சோதனையிட்டு இருந்தால், தற்போது கருக்கலைப்பு மாத்திரையை ஒரு பெண் வாங்கி சாப்பிடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

ஆனால், அப்போது கைது நடவடிக்கையுடன் அதிகாரிகள் சென்றுவிட்டனர். அதன் பின்னர் ஜாமீனில் வந்த சுரேஷ் மீண்டும் தனது வழக்கமான பணியை மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்