கரும்பு தோட்டத்தில் பெண் பிணம்
திருக்கோவிலூர் அருகே கரும்பு தோட்டத்தில் பெண் பிணம் கொலையா போலீஸ் விசாரணை;
திருக்கோவிலூர்
திருக்கோவிலுார் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த பெண் கரும்பு தோட்டத்துக்கு எப்படி வந்தார்? அவரை யாரேனும் கொலை செய்து உடலை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.