தந்தை இறந்த சூழ்நிலையிலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிதேர்ச்சி பெற்ற மாணவிக்கு நிதி உதவி

தந்தை இறந்த சூழ்நிலையிலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.;

Update:2023-05-22 00:15 IST


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சைலோம் பகுதியை் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 48). பெயிண்டர். இவரது மகள் திலகா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வின் போது, தமிழ் தேர்வை எழுதிவிட்டு வந்த நிலையில், அவரது தந்தை முருகதாசுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 9-ந்தேதி மாலையில் இறந்து போனார்.

அதை தொடர்ந்து மறுநாள் நடந்த ஆங்கில தேர்வை, சோகத்துடன் சென்று திலகா எழுதினார். பின்னர் தந்தையின் இறுதிநிகழ்வில் அவர் பங்கேற்றார். அதன் பின்னரும், தேர்வுக்கு படித்து அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்தார். தற்போது தேர்வு முடிவுகள் வந்த நிலையில், மாணவி திலகா 500-க்கு 428 மதிப்பெண்கள் பெற்றார்.

இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் நேரில் சென்று மாணவி திலகாவுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி அளித்து பாராட்டினார். அதேபோன்று, துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா சார்பில் நகர தி.மு.க. அவைத் தலைவர் டி.குணா 3 ஆயிரம் ரூபாயும் அளித்தார்.

அப்போது அவருடன் தி.மு.க. நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, பிரமிளாராகவன், சண்முகவள்ளிஜெகன்நாத், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் மாணவி திலகாவை நகர முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவி திலகா கூறுகையில் ஏழ்மை நிலையில் உள்ள தனது குடும்பத்தின் நிலை அறிந்து தமிழக அரசோ அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் எனது உயர் கல்வி செலவை ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்