தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
சுல்தான்பேட்டை அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.;
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை அருகே நகரகளந்தை பிரிவு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தென்னை நார்களை (மஞ்சி) உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்தால் அப்பகுதி புகைமண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தீ விபத்தில் இருப்பு வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நார் எரிந்து சேதமடைந்தன. யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.