கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்

மீனவர்களின் கருத்து கேட்காமல் கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-11-07 14:55 GMT

ராமநாதபுரம், 

மீனவர்களின் கருத்து கேட்காமல் கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.

கருத்து கேட்பு கூட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் நேற்று மீன் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த மீனவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, சகாயம், மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர் கருணாமூர்த்தி மற்றும் பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் மற்றும் மண்டபம், ஏர்வாடி, தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் கடற்கரை மேலாண்மை திட்டம் முழுவதுமாக வெப்சைட்டில் ஆங்கிலத்தில் இருப்பதால் அந்த திட்டத்தில் உள்ள சாராம்சங்கள் எதுவும் மீனவர்களுக்கு புரியவில்லை.

அதனால் கடற்கரை மேலாண்மை திட்டம் குறித்து தமிழில் மொழிபெயர்த்து அந்த தமிழ் நகலை அந்தந்த ஊரின் கிராம பஞ்சாயத்திடம் வழங்கி நேரடியாக வந்து அந்தந்த பகுதி மீனவர்களிடம் நேரடியாக கருத்து கேட்டு மீனவர்களின் கருத்தின் அடிப்படையில் வரைபடத்தில் அந்த பகுதியையும் சேர்த்து அதன் பின்னர் கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நீட்டிக்க வேண்டும்

மீனவர்களின் கருத்து கேட்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதுபோல் கடற்கரை மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்துவதற்கான காலக்கெடு வருகிற 21-ந்தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்கள் போதாது. இன்னும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர். மீனவர்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைப்பதாக மீன்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்