வெள்ளிநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் பலத்த மழைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-03-17 19:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் கடும் குளிரும், பகலில் வெப்பமும் நிலவி வந்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள், மரங்கள், தாவரங்கள் கருகின. இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வந்தனர். நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இதனால் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பலத்த மழை பெய்ததின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்