வல்வில் ஓரி விழாவையொட்டிகொல்லிமலையில் மலர்கள் கண்காட்சிஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்

Update: 2023-08-02 19:00 GMT

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நேற்று அமைக்கப்பட்டிருந்த மலர்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

வல்வில் ஓரி விழா

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் 2 நாட்கள் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் முதல் நாளான நேற்று கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்கள் கண்காட்சி நடந்தது. 2-வது நாளில் நாய்கள் கண்காட்சி, வில்வித்தை போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

விழாவில் நேற்று தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பொன்னுசாமி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பார்வையாளர்களை கவரும் வகையில் காய்கறி அலங்காரம் இடம்பெற்றிருந்தன. மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவர 40 ஆயிரம் வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட `சோட்டா பீம்' பொம்மை இடம் பெற்றிருந்தது. 15 ஆயிரம் பல்வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டு இருந்தன.

கங்காரு வடிவம்

இதுதவிர 25 ஆயிரம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கங்காரு வடிவம், 20 ஆயிரம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முயல் வடிவம், 15 ஆயிரம் வண்ண மலர்களால் அமைக்கப்பட்டிருந்த இதய வடிவமைப்பு ஆகியவை சுற்றுலா பயணிகளை கவருவதாக இருந்தது.

காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ஆக்கி சாம்பியன் அடையாள சின்னமான பொம்மன் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்தன. மேலும் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்கிட் லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்க பறவை, கிளாடியோஸ் டெய்சி, சம்பங்கி போன்ற மலர்களால் பொதுமக்கள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.

மருத்துவ பயிர்கள்

மேலும் இந்த ஆண்டு மருத்துவ பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தாவரவியல் பெயர், பயன்பாடுகளுடன் மருத்துவ பயிர்கள் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு கண்டுகளித்தனர்.

செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

மலர் கண்காட்சியில் 1 லட்சத்து 35 ஆயிரம் வண்ண மலர்கள் மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி பல்வேறு உருவங்களை வடிவமைத்திருந்தனர். கடந்த காலங்களில் இவற்றை சுற்றுலா பயணிகள் மற்றும் மலைவாழ் மக்கள் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். ஆனால் தற்போது பெரும்பாலானவர்களின் கைகளில் ஸ்மார்ட் போன் இருப்பதால் மலர்க்கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் பலரும் பூக்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த உருவங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக காதல் ஜோடிகள் பலர் பல வண்ண மலர்களால் அமைக்கப்பட்டிருந்த இதய வடிவில் ஆன அமைப்பு முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்