கல்லேரி மீன்பிடி குத்தகைதாரரின் உரிமத்தை ரத்து செய்யக்கோரிபொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

கல்லேரி மீன்பிடி குத்தகைதாரரின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-02-20 21:44 GMT

சங்ககிரி,

மீன்பிடி குத்தகை

சங்ககிரி அருகே இருகாலூர் ஊராட்சியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கல்லேரி உள்ளது. இந்த ஏரி மீன்பிடி குத்தகை சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏரியில் மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன் மற்றும் மீன் குஞ்சுகளுக்கு உணவுக்காக கழிவுகளை ஏரியில் கொட்டி மீன் பிடித்து வருவதாகவும், அதனால் ஏரி நீர் மாசுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏரி தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் ஏரி அருகே உள்ள விவசாய கிணறுகள் ஆழ்துளை குழாய் கிணறுகளிலும் தண்ணீர் மாசு ஏற்பட்டதாகவும் கூறி, கல்லேரி மீன் பிடி குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி நடந்த இருகாலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கல்லேரி மீன்பிடி குத்தகை உரிமம் ரத்து செய்ய வேண்டுமென ஊர் பொதுமக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

ஆனால் சங்ககிரி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் கல்லேரி மீன்பிடி குத்தகை உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என இருகாலூர் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடம் முன்பு நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊர் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்