வேட்டங்குடி சரணாலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த வெளிநாட்டு பறவைகள்

கண்மாய்கள் வறண்டதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்தன.

Update: 2022-07-15 18:03 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் வறண்டதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்தன.

வேட்டங்குடி சரணாலயம்

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளதால் ஆன்மீக தலமாக இருந்து வருகிறது. இதுதவிர பல்வேறு சுற்றுலா தலங்களும் உள்ளது. அதில் முக்கியமான இடமாக திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேட்டங்குடி பகுதிக்குட்பட்ட கொள்ளுக்குடிப்பட்டி பகுதியில் சுமார் 40 எக்டேர் பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடிப்பட்டி மற்றும் சின்ன கொள்ளுக்குடிப்பட்டி ஆகிய கிராமங்களை அடங்கிய கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி அமைதியான சூழ்நிலை இருப்பதால் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவது வழக்கம். அவ்வாறு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து செல்வது வழக்கம்.

வெறிச்சோடியது

கடந்தாண்டு மழைக்காலத்தில் இந்த கண்மாய்கள் நிரம்பியதால் பல்வேறு நாடுகளில் இருந்து உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து இனம்பெருக்கம் செய்தது. மேலும் கடந்தாண்டு இந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் கூடுதலாக 3 மாதங்கள் வரை இந்த பறவைகள் இங்கேயே தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்தது. அப்போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பறவைகளை பார்த்து ரசித்து சென்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் போதிய மழையில்லாமல் கடும் வெயில் வாட்டி வதைத்ததால் கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியது. மேலும் விவசாயமும் நிறைவு பெற்றதால் பறவைகளுக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் இங்கிருந்த பறவைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து தங்களது இருப்பிடத்திற்கே சென்றது. இதனால் தற்போது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்