ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக தனியார் நிறுவனத்திடம் ரூ.12½ கோடி மோசடி

ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக தனியார் நிறுவனத்திடம் ரூ.12½ கோடி மோசடி சென்னையில் 3 பேர் கைது.

Update: 2023-08-13 20:40 GMT

சென்னை,

கோவையை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது 60). இவர் அங்கு வி.எல். எனர்ஜி இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜன்பாபு சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் எனது நிறுவன வளர்ச்சிக்காக ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.12½ கோடி முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். நான் அதை உண்மை என்று நம்பி ரூ.12½ கோடிக்கு வங்கி காசோலை கொடுத்தேன்.

ஆனால் ரூ.500 கோடி கடனும் தராமல், நான் கொடுத்த ரூ.12½ கோடி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணை முடிவில், குறிப்பிட்ட தனியார் வங்கியின் துணை மேலாளர் பாலாஜி, ஊழியர்கள் புவனேஸ்வரன், கோவிந்தன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மோசடி பணம் ரூ.12½ கோடியில், ரூ.2½ கோடி பணம் கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மீதி பணத்தை வங்கி கணக்கில் போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்