2 பேரிடம் ரூ.20½ லட்சம் மோசடி

2 பேரிடம் ரூ.20½ லட்சம் மோசடி;

Update:2023-04-23 00:15 IST

கோவை

மத்திய அரசின் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.20½ லட்சம் பண மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு பணி

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 37). பட்டதாரியான இவர் மத்திய, மாநில அரசு பணிக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலமாக கோவை வீரகேரளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (32) என்பவர் ராஜேஷ்குமாருக்கு அறிமுகமானார்.

அவர் மத்திய அரசில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் ஏராளமானவர்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் சாரணர் இயக்கத்தில் வேலை வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மையென நம்பிய ராஜேஷ்குமார் ரூ.11½ லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் கொடுத்தார்.

போலி பணி ஆணை

அதன் பின்னர் ராஜேஷ்குமாருக்கு சாரணர் இயக்கத்தில் வேலை கிடைத்தது போன்று ஒரு போலியான பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் ராஜேஷ்குமார் அந்த பணியாணையை கொண்டு பணியில் சேர சென்ற போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணத்தை திருப்பிக் கேட்ட போது பிரசாந்த் உத்தமன் கொடுக்க மறுத்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ்குமார் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.இதேபோல மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரும் பிரசாந்த் உத்தமனிடம் அரசு வேலைக்காக ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாக கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் ைகது

புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி (31) ஆகியோர் சேர்ந்து மேற்கண்ட 2 பேரிடமும் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் கணவன் - மனைவி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்