சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது

தர்மபுரியில் சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-07 16:57 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுமி (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (42) மற்றும் அவருடைய மனைவி சியாமளா (36) ஆகியோர் நடத்தி வந்த சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு போட்டுள்ளார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தீபாவளி சீட்டுக்காக மாதந்தோறும் தலா ரூ.1,500 செலுத்தி உள்ளனர். 12 மாதம் சீட்டுத்தொகை செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம், இனிப்பு, காரம், பட்டாசு ஆகியவை வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்ததால் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு தங்கத்திற்கு பதிலாக பணமாக திருப்பி தருவதாக மணிவண்ணன் கூறியுள்ளார். ஆனால் கூறியபடி பலருக்கு அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதேபோல் பிற சீட்டு திட்டங்களில் பணம் கட்டிய பலருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மொத்தம் ரூ.16 லட்சத்து 93 ஆயிரம் சீட்டு தொகையை திருப்பி தராமல் அவர் மோசடியில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்