சவுமியநாராயண பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச விழா
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கஜேந்திர மோட்ச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருப்பத்தூர்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கஜேந்திர மோட்ச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கஜேந்திரமோட்ச விழா
திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரதான நிகழ்வாக கஜேந்திர மோட்ச விழா நடந்து வருகிறது. அதாவது அகஸ்திய முனிவரால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னன் பெருமாள் சக்ராயுதம் மூலம் சாப விமோசனம் பெற்றார். இந்த நிகழ்ச்சி கஜேந்திர மோட்ச விழாவாக ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இக்கோவிலில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான விழாவில் சர்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் சவுமிய நாராயணபெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள வாத்தியத்துடன் சொர்ணவள்ளி என்று அழைக்கப்படும் கோவில் யானை முன்னால் செல்ல திருக்கோஷ்டியூர் கோவில் அருகே உள்ள மணிமுத்தாற்றில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமி தரிசனம்
அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மணிமுத்தாற்றின் தண்ணீரில் மோட்ச தீபத்தை வைத்து சொர்ணவல்லி யானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் அங்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மீது யானை தண்ணீரை பீச்சியடித்தது. தொடர்ந்து கஜேந்திர மோட்சம் பெற்ற யானை சொர்ணவல்லி அங்கிருந்த சவுமிய நாராயண பெருமாளை 3 முறை சுற்றி வந்து மண்டியிட்டு வணங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.