விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜமாத் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.;
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜமாத் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. விழா கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும், விநாயகர் சதுர்த்தி நடத்தக்கூடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஜமாத் நிர்வாகத்தினர் விநாயகர் சதுர்த்திக்கு மத நல்லிணக்கத்தை பேணி முழு ஒத்துழைப்பு தர உள்ளதாக உறுதியளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு வைத்த இடங்களில்
இதேபோல், இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் பேசிய அதிகாரிகள், விநாயகர் சதுர்த்தியின்போது கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டதோ, அதே பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது, சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும்போது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள பாதையில் செல்ல வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.
மேலும், சிலைகள் வைக்கப்படும் இடங்களில் விழாக் குழுவினர் தன்னார்வலர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு கூடுதலாக போலீசார் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கூட்டத்தில் தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் தேவகுமார் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய்த்துறையினர், வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர் மற்றும் திம்மம்பேட்டை போலீசார், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் ஜமாத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.