விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2023-09-18 21:08 GMT

விநாயகர் சதுர்த்தி விழா

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதில் திருச்சி மாநகரில் 286 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என மொத்தம் 1,236 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (புதன்கிழமை) விநாயகர் சிலைகளை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்படும் என்பதால், திருச்சி காவிரி பாலத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொன்மலைப்பட்டி, தொட்டியம்

லால்குடி ஒன்றியத்தில் பூவாளூர், அன்பில், லால்குடி உள்பட 52 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இச்சிலைகள் நாளை நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. பொன்மலைப்பட்டி அருகே திருவெறும்பூரில் பக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் 10, 5, 3 அடிகளில் பல்வேறு வகைகளில் சுமார் 67 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சமயபுரம், தா.பேட்டை

மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இனாம் சமயபுரம், மாடக்குடி, எசனக்கோரை, அப்பாதுரை, மாகாளிகுடி, இருங்களூர், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், வளவனூர், செம்பழனி, மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், திருவெள்ளறை, சிறுகனூர், எதுமலை, வலையூர், பாலையூர், தத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இரவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

தா.பேட்டை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். தா.பேட்டையில் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் விநாயகர் சிலை வைத்து அகவல் பாராயணம், விநாயகர் துதி போற்றி வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ராஜகணபதிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள விநாயகர், என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்