பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஊசூர், லத்தேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.;
சிலைகள் ஊர்வலம்
நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
கடந்த 20-ந் தேதி வேலூரில் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டது. எனினும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் கரைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 5-ம் நாளான நேற்று சேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. விழாக்குழுவினர் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஊசூரில் இந்து முன்னணி சார்பில் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்காக வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிலைகள் ஊசூர் குளத்துமேடு பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இளைஞர்கள் மேளம்அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் சிலைகள் வெட்டுகுளம் பகுதியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.
லத்தேரி
கே.வி.குப்பம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை லத்தேரி பஸ் நிலையத்தில் இறைவணக்கம் பாடி புறப்பட்டது. லத்தேரி, இ.பி.காலனி வழியாக மேள, தாளங்களுடன் சென்று தாங்கல் ஏரியில் கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், லத்தேரி இன்ஸ்பெக்டர் நா.சுரேஷ்பாபு, உள்பட சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னதாக நடைபெற்ற ஊர்வலம் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.டீக்காராமன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் கோ.மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கல்வியாளர் துரைகோபால், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொது செயலாளர் கே.முத்து நன்றி கூறினார்.