ரெயில்வே மருத்துவமனையில் கேட்கீப்பர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கூடுதல் நேரம் பணி செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் திண்டுக்கல் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றும் ரெயில்வே கேட் கீப்பர்கள் 25 பேர் திண்டுக்கல் ரெயில்வே மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் ரெயில்வே நிர்வாகம் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கூறினர். மேலும் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு சான்று அளிக்கும்படி தெரிவித்தனர்.
ஆனால் ரெயில்வே மருத்துவமனை டாக்டர், பழனிக்கு பணிக்கு சென்றுவிட்டதாகவும், கேட் கீப்பர்களை மருத்துவ பரிசோதனைக்கு மதுரைக்கு செல்லும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த கேட்கீப்பர்கள், ரெயில்வே மருத்துவமனைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்வே மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி ரெயில்வே கேட்கீப்பர்கள் கூறுகையில், ரெயில்வே கேட்கீப்பர்களுக்கு வாரத்துக்கு 60 மணி நேரம் மட்டுமே வேலை என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் 72 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். மேலும் கூடுதல் வேலை நேரத்துக்கு அலவன்சு தொகை தருவதாக கூறியதோடு, அதை இதுவரை தரவில்லை. ஆனால் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவ விடுப்பு கேட்டாலும் தருவதில்லை. எனவே வாரத்துக்கு 60 மணி நேரம் வேலை எனும் உத்தரவை அமல்படுத்த வேண்டும், என்றனர்.