மர்மவிலங்கு கடித்து ஆடுகள் அடுத்தடுத்து சாவு-படுகாயம்

ெநாய்யல் அருகே மர்மவிலங்கு கடித்து ஆடுகள் அடுத்தடுத்து இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2023-02-17 18:59 GMT

மர்மவிலங்கு கடித்துள்ளது

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. விவசாயி. இவரும் அப்பகுதியில் குடியிருப்பவர்களும் தங்கள் வீடுகளில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாச்சிமுத்து உள்பட பலர் தங்களது வீடுகளில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கட்டி வைத்திருந்தனர். இந்தநிலையில் இரவு அந்த பகுதிக்கு வந்த மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடுத்தடுத்து கடித்து கொன்று இழுத்து சென்றுள்ளது. சில ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்மவிலங்கு கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேற்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வந்த மர்ம விலங்கின் கால் தடங்களை எடுத்து சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஆடுகளை கடித்தது சிறுத்தை புலியாகத்தான் இருக்கும். ஏனெனில் எடை கூடிய பெரிய ஆடுகளை நாய்கள் இழுத்துச் செல்ல வாய்ப்பு இல்லை. எனவே வனத்துறை அதிகாரிகள் மர்ம விலங்கை உடனடியாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடவேண்டும் என்றனர்.

இந்த சம்பவத்தால் அத்திப்பாளையம் புதூர் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்