திருமங்கலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை
திருமங்கலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.;
திருமங்கலம்
திருமங்கலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
முட்புதரில் அழுகிய நிலையில் பிணம்
திருமங்கலம் விமான நிலைய சாலையில் சுங்குராம்பட்டி அருகே தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் பின்புறம் உள்ள முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் தாலுகா போலீசார் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் போலீசார் சோதனை செய்தபோது உடல் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்
இறந்தவர் உடல் அருகே பை ஒன்று கிடந்தது. பையை சோதனையிட்டபோது பைக்குள் மதுபாட்டில் ஒன்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்து கிடந்ததைக் கண்டு இறந்தவர் மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது இறந்தவர் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் குறிஞ்சி நகரை சேர்ந்த பாலுசாமி மகன் பாஸ்கர்(வயது 36) என்பது தெரியவந்தது. அவர் சிவகங்கையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரது தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.