சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு;

Update:2023-03-09 00:15 IST

கோவை

ரவுடிகள் தொடர்பு கொண்டு பேசுகின்ற சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு அமைத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆயுதங்களுடன் மிரட்டும் வீடியோ

கோவை மட்டுமின்றி சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிகள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு மற்றவர்களிடம் பேசினால் போலீசார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்தை கண்டறிந்து விடுவார்கள் என்ற அச்சம் ரவுடிகள் இடையே காணப்படுகிறது. இதனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி கொண்டு ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். இதனால் அந்த ரவுடிகள் எங்கு இருக்கின்றனர்? அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளம்

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது:-

செல்போன் எண் மூலம் ரவுடிகள் தொடர்பு கொண்டு பேசினால், அவர்களின் இருப்பிடத்தை எளிதாக அடையாளம் காண முடியும். இதன்காரணமாக தற்போது ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை.

சமீபத்தில் கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தனது நண்பர்களுடன் ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் அவர் யார், யாரை தொடர்பு கொண்டு பேசினார் என்பதை துல்லியமாக கண்டறியமுடியவில்லை. இதுதவிர ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாட்ஸ்-அப் மூலம் குழு உருவாக்கி கஞ்சா விற்பனை செய்தார்.

கண்காணிக்க குழு அமைப்பு

இந்த நிலையில் கோவையில் கஞ்சா விற்பனை, கட்டபஞ்சாயத்து செய்யும் ரவுடி கும்பல்கள் ஒருவருடன், ஒருவர் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களை கண்காணிக்க கோவை வடக்கு, தெற்கு ஆகிய சரகங்கள் சார்பில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதுடன், ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் கண்காணித்து அது குறித்து தகவல்களை சேகரிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்