காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும்
பொள்ளாச்சியில் காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் போலீசார் மன உளைச்சல் இன்றி வேலை பார்க்கும் வகையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தேவைப்படும் ஊர்களுக்கு போலீசாருக்கு பணிமாறுதல், உரிய விடுப்பு, யோகா பயிற்சி என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் போலீசார் கூறியதாவது:-
வழக்குகள் சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு செல்லும் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும், போலீசாருக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் வாரந்தோறும் யோகா வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும். கோவைக்கு மாதந்தோறும் மளிகை பொருட்கள் வாங்க கேண்டீனுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமத்தை போக்க வாகனம் மூலம் மளிகை பொருட்கள் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டால் வாங்க ஏதுவாக இருக்கும்.
காவலர் குடியிருப்பு
மேலும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் வாடகை அதிகமாக உள்ளதால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே விரைவில் காவலர் குடியிருப்பு கட்டி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து துணை சூப்பிரண்டு தமிழ்மணி கூறும்போது, உங்கள் கோரிக்கைகளை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் தெரிவித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் போலீசார், வருவாய் துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.