கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.;

Update:2023-06-25 18:31 IST

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

நான் முதல்வன் "உயர்வுக்கு படி" என்ற திட்டத்தின் மூலம் பிளஸ்-2 வகுப்பு முடித்தபின் உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமையில் 3 வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை டேனிஷ் மிசன் மேல் நிலைப் பள்ளி வளாகத்திலும், செய்யாறு கோட்டத்தில் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) செய்யாறு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்திலும், ஆரணி கோட்டத்தில் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஆரணி சுப்பிரமணியர் சாஸ்திரியார் நிதி உதவி மேல் நிலைப் பள்ளி வளாகத்திலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

முகாமில் உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகாட்டல், சாதிச் சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகிய 3 வகைச் சான்று வழங்குதல், வங்கிக்கடன் பெற திறன் பயிற்சி மற்றும் பிற உதவிகள் சார்ந்த வழிகாட்டல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த முகாமில் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், சமூக பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்த்தல், பெற்றோர்- மாணவர்களின் உயர்கல்வி விருப்பங்களுக்கான ஆலோசனைகளை வழங்குதல், மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, இலவச விடுதி மற்றும் உதவித்தொகை விவரங்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

எனவே பிளஸ்- 2 வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்